Tuesday, August 31, 2021

முதியோர் இல்லம்

உதிர்த்த இலைகளோ

உண்மையறியா உச்சத்தில்

முதிர்ந்த கிளைகளோ

முதியோர் இல்லத்தில்

சுமையாய் ஆனதோ

சுமந்த பொதிகளுக்கே

கூடற்ற இந்த

கூண்டு குயில்கள்

குஞ்சுகளின்

குத்தல் வெப்பத்தில்

பொசுங்கிய பொதிமூட்டையாய்

உதறிய உறவுகள் எண்ணி

உலர்ந்த வாழ்நாள் எண்ணி

மரணித்த

மானிட உள்ளங்களாய் வாழும்

புனித ஆலயம்

இந்த

புதியதோர் இல்லம்

காதல்3

உன் இதழ்

தொட்டு இடறிய

நீர் துளிகள்

என் மனம்

தொடும்

மழையாய்..

__

உன் பாதம்

தொட்ட நீர் கூட எ

ன் வாழ்வு

தொடும்

 புனித நீரே

--

நீ நனைவாய்

என்று தெரிந்தே

பொழிகிறது

மழை..

வருணனுக்கும்

உன்னோடு

வாழ ஆசை

__

பிரவாகம்

சுற்றும் பக்தன்

போல்

உனை சுற்றும்

மழைச்சாரல்

__

அம்மனுக்கு

அபிஷேகமென

உனை ஆரத்

தழுவும் மழை

___

உழைப்பவனின்

வியர்வை

 மழையில்

நனையும்

முதலாளி

____

மண்ணில்

வானவில்

மழை தொட்டு

நனைத்த

உன் ஆடையின்

வர்ண சாயம்

___

என் மனம் போல்..

எனை தொட்ட

மழையும்..

உன் பாதம் தொட..

அன்னை தேடி தவழும்

மழலையாய்

அம்பாளும் அவலையும்

அவனின்

வருகை பதிவேட்டுக்கு

காத்து நிற்கும்

ஆசானாய் அவள்

மாணவனாய் அவன்


உள்ளக் கிடங்கில்

ஒராயிரம்

அலைக்கற்றையாய்

அவன்.நினைவுகள்

அவளுள்ளோ


அலைவரிசை எண்

தெரியாது

அலையும்

மன உணர்வுகள்

அவனுள்ளோ


அலங்காரமும்

அவமதிப்பும்

பெண்ணுக்கே

உவமையானதோ


நெஞ்சுடைத்தவன்

சுவடுகள் தேடி

நொடிகள் பல

காத்து நிற்கும்

வானவில்லோ


சிறை சேர்க்க

காத்து நிற்கும்

மாப்பிள்ளையும்

தன்னை

கரை சேர்க்க

கலன் கொண்டு வராத

காதலனையும்

கடல் கொண்டு போக

காத்திருந்தாளோ


ல்லை

காற்று வாங்க

நின்றிருந்தாளோ


ஆடவன்

அழுதிருந்தாலும்

காணா இக்கவியுழகம்

அழகு மயில்

திரும்பியதாவ்

ஆயிரம் கேள்வி

வைக்கும்

அதில் அவளுக்கு

அக்னி வேள்வி

வைக்கும்


தீக்கிரையானாலும்

தில்லையின் நாயகிக்கு

குற்றமில்லை

சிதைக்கப் பட்டவள்

சீதைதானே

மணப்பெண்

அலங்காரத்திற்கு

அரை நொடிகளபோதும்

அது அமையும்

அவகாசத்திற்கு

அவளுக்கு பல

யுகங்கள் வேண்டும்


முன்னழகு முகம்

பார்த்து

முகம் சுளித்த

உள்ளங்கள் காணது

பின்னழகு காட்டி

நின்றளோ


இல்லை

அலங்கரிப்பில்

அணிகலன்

குறைவொன்று கூறிய

குறை மனது

பிடியாது

பின்னல் சடை காட்டி

நின்றாளோ


இவள் இவர்கள்

விட்டுச் சென்ற

முதிர்கன்னியா

இல்லை

முகம் காட்ட அஞ்சும்

புதிர் கன்னியா


இவள் நின்றதென்னவோ

இறைவன் வரம் தேடி அல்ல

இருமண வரன்

வேண்டி


வினாக்கள் பல இருந்தும்

விடை என்றும்

அவள் வசமே

சுதந்திரம்

ஆயிரமாயிரம் மாண்டோம்

ஆறிடினும் புண்பட்டோம்

ஆதவனையே சுட்டெறித்தோம்

அயராது பெற்ற

விடுதலைக்காய்


விலை போன

களை களைந்தோம்...

தலைகள் பல களைந்தோம்

தரணியின் தடையறுக்க...


எங்களின் உள்ளமட்டுமல்ல

உடை கூட

எங்களின் தேசியம்

பேசும்


உதைபட்டோம்

புதைபட்டோம்

புத்துயிர் நீத்தோம்

சுவாசமென

கொண்ட

சுதந்திரத்திற்காய்


துரோகத்தின்

நிழல் கண்டு

துயருற்றோம்

துடித்திட்டோம்

துணிந்திட்டோம்

தூவானம் எங்களின்

கரம் நனைக்க


மதமில்லை

மனித சாதி தவிர

வேறெதுவுமில்லை

வெறி கொண்ட

 எங்களின்

சுதந்திர வேட்கையில்


இன்றோ


உயிர் விட்ட எங்களின்

உள்ளங்கள்

உடைந்து நிற்கும்

உங்களின் கோழை நிலை

கண்டு...


வீழ்ந்திட்ட எங்களின்

நெஞ்சங்கள்

மீண்டும்

சீழ் பட்டு மாயும்

இந்த கொள்ளையரின்

ஆட்சி கண்டு


எங்களின் வாலாபாக்

சாம்பல்

சுவடுகள் அணையாது

எரியட்டும்

 எரிதழல் உங்கள்

உள்ளத்தில்


போதும் இந்த

சுதந்திரம்..

புகுந்திடுவோம்

மற்றுமோர்

ஆங்கிலச் சிறையில்

உயிரோவியம்

இமை மூடிய இரவுகளில்

மனம் உறங்கா நாட்களில்

தடம் புரளா உன்

நினைவுகளில்

உதிர்ந்ததென்னவோ

என் உயிர் மட்டும்தான்...


மீள முடியா உன்

நினைவுகளுடன்

மீண்டும்

ஜனனிக்கிறேன்

உன் காதல் தேசத்தில்

உயிர் வாழ...


உதிரங்களின் நிறம்

ஒன்றாக இருப்பினும்

உயிர் கொண்ட

இருவரின் உள்ளம்

கொள்ளும் நினைவுகள்

ஏன் வெவ்வேறாக..


உன் உள்ளம் தேடி

ஓடி வரும்

உமை நெஞ்சின்

உயிரோவியம்

என்றும் என் நீ

சாதியம்

நிறம் கூறி

கரம் தள்ளும்

சுற்றம்

கரத்தின் வியர்வையில்

உயிர் வாழும்


சக மானுடத்

தீண்டத்தகாதம் பேசி

அதன் வாழ்வு

மீளத்தகாததாக்கும்


காலணியாகும்

ஆவினை

மானுடம் உண்ணத்

தடை கொடுக்கும்


என் தமக்கை

வெளுக்கும் துணி

என் தாய்

கழுவும் பாத்திரம்

என் தகப்பன்

செய்யும் விவசாயம்

தீண்டத்தகாவதில்லை


எங்களின் சுவாசம்

நிறைந்த காற்று

தீண்டத்தகாவதில்லை


எங்களின் காலடி

பட்ட பூமி

தீண்டத்தகாவத்தில்லை


எங்களின் குடிசையில்

வழிந்து கடல்

கலக்கும் மழைநீர்

தீண்டத்தகாவதில்லை


உங்களின் விலக்கீடுகளே

எங்களின் ஒதுக்கீடுகள்


என்றோ ஒர்நாள்


தாழ்ந்து நின்று

தானம் கேட்ட

எங்களின் கரங்கள்

எழுந்து நின்று

வானம் தொடுகைரயில்


தொட்டு அணைக்கா

உங்களின் கரங்கள்

எங்களின் வரலாற்றுக்கு

தூணாகலாம்


வேற்றுமை பேசம்

உங்களின் மனங்கள்

எங்கள் வெற்றியின்

வேர் தேடலாம்


சாதியம் பேசியது போதும்

வா

தமிழ் வாழியம் பாடலாம்

வண்ணக்காதல்

ஆங்காங்கே

சிதறிய

நம் காதலின்

நினைவுத் துளிகளை

ஒன்றாகக் கோர்க்கிறோம்

ஓர் திருமணப் பந்தத்தில்

அங்கே

அவளும் கணவனும்

நானும் மனைவியும்

உவப்புயின்றி வெற்று

உடல்களாய்

வெட்ட வெட்ட தளிரும்

வேதனைக் காடு

இந்த வர்ணஜாலக்

காதல்

மரபுக்காதல்

மையிட்ட மான் விழி அவளை

மையல்லிட ஆண் விழி நோக்கும்

நோக்கும் கூர் விழி பார்வையிலே

பாவை மனம் பதறிடுமே


அஞ்சிடும் அவள் விழி கண்ட

ஆண் கரமதுவே

 கோதிடும் கோதையவள்

 பூங்குழலை அக்கணமே


அசைந்திடும் பூங்குழல்

ஆடவன் கைதனிலே

இசைந்திட மபங்குது

மங்கை மானுட(ல்) தேகமே


பூவொத்த செந்நிற மேனிதனில்

வாள் பிடித்தவன் கைகள்

ஒய்யார வளைவுதனில்

வழி தேடி வசந்தம் காணுமே


வழி நாடி வந்த கரமதனை

பழி சொல்ல வந்த பாவையிதழ்

கோமகன் வாய்தனிலே

தித்திக்கும் பலாச் சுளையாய்

பிறர் வாட வாழாது..பிறர் வாழ வாழும் இயற்கைக்கு..

பூவிற்கு வலியாது

எடுத்த

தேனீக்கு வலியாது

தேன் திருடுவதில்லை

இவ்வறிவு


வாழ நிலம்

தரும் இயற்கையை

ஆள வழி தேடும்

இவ்வறிவு


கொடுத்தே

பழகிய

இயற்கையை

எடுத்தே பழகி

இன்று

அழித்தே வாழும்

இவ்வறிவு


தன்னின்

சுய லாபத்திற்காய்

தன் தலைமுறையின்

வாழ்வியலையும்

அழிக்கும்

இவ்வறிவு


இயற்கையாய்

பெற்ற அனைத்துக்கும்

விலை வைக்கும்

இவ்வறிவு

பறிப்பதும்

எடுப்பதும்

இயற்கையிடம் மட்டுமல்ல

தம் சக வாழ்

ஆறறிவிடமும் தான்


வெட்டி எறிந்த

வாழை கூட

வளர்ந்து வளம் கொடுக்கும்

 இவ்வறிவின்

வாழ்விற்காய்


பூக்கும் பூவும்

காய்க்கும் காயும்

கனியும் கனியும்

தனக்கென்று கொள்ளாத

இம் மரங்களுக்கு

பறிப்பவர் கைகளும் தெரிவதில்லை

ருசிப்பவர் முகங்களும் அறிவதில்லை


ஒளி தரும் நிலவும்

மழைத்துளி தரும் வானும்

உயிர் தரும் காற்றும்

நல்உணவு தரும் காடும்

விலை கேட்பதில்லை


கற்றுத் தருவதும்

கற்றுத் தெளிவதும்

இவ்வறிவல்ல

இவ்வறிவை

கட்டிக்காக்கும்

இயற்கையே

என்னவன்

நீ

சிதறிய பொருட்களை

அழகழாய்

ஒன்று சேர்க்கும்

ஒவ்வோர் தருணங்களிலும்

சந்தோஷமாய்

சிதறிப் போகிறேன்

என்னுள்

இயற்கை ஆகிய நான்

விடியும் பொழுது

மலரும் பூக்கள்

கூவும் குயில்கள்

ஆடும் மயில்கள்

உதிக்கும் சூரியன்

உருகும் பனி

ஒளிரும் நிலவு

எதிலும் மாற்றமில்லை


ஆயிரமாயிரம் மரங்களை

மாய்த்த பின்னும்

கடைசி மரத்தின்

நல்லியல்பில் மாற்றமில்லை


ஆயிர்மாயிரம் ஏரிகளை

ஆக்கிரமித்த பின்னும்

கடைசி ஏரியின்

ஈகையில் மாற்றமில்லை


ஓசோனை துனைத்த

பின்னும்

தூறும் மழையின்

மகிமையில் மாற்றமில்லை


ஆறறிவு அதிகாரம் பேசி

ஆயிரமாயிரம் சதுர அடிகளை

அளக்க நினைத்த மானுடமோ

இன்று

ஆறடி நிலத்துக்கு பயந்து


கண் கண்ட நிலத்தினை

ஆள நினைத்த மனிதமோ

கண்ணுக்குத் தெரியா

கிருமியின் ஆட்சியில்


வந்து மறையும் உனக்கே

இவ்வலகென்றால்

அனைத்து உயிருக்கும்

வாழ்வளித்த

இயற்கை எனும்

எனக்கு


உலகப் பேரவையில்

இயற்கை ஆகிய நான்

உயிர்

காட்டு நீர் கானல் நீர் என்றானபின்.. எங்களின் இருப்பிடம் உங்களின் போதை என்றானபின்.. எங்களின் வாழ்வாதாரம் உங்களின் விற்பனை என்றானபின்.. உங்களின் இருப்பிடம் வந்து எங்களின் இருப்பிற்காய் கையேந்தினோம் நாவின் தாகத்திற்காய்.. வளங்களை வாக்குறுதிகள் கூறுகள் போட்ட பின்னும் எட்டி நின்றும் காண முடியா எட்டாவது தலைமுறைக்கு சேர்த்த பின்னும் சுற்றி காணும் உயிர்கள் அனைத்தையும் சுடுகாட்டில் புதைத்த பின்னும் நில நீர் விற்பனையில் நீ தீர்மானித்த மை.. ஆறறிவு பேசி இயற்கையை களவாடிய மாண்புமிகுக்களே.. ஐந்தறிவு போதும் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் வைக்க... எங்களின் எச்சம் நிரப்பிய காடுகள் உங்களின் லட்சங்களுக்காய் கான்கீரிட் காடுகளாய் வளங்கள் வாதிகளுக்கு மட்டுமல்ல எங்களின் வாழ்க்கைக்கும்தான்.. ஒரறிவு முதல் ஆறறிவு வரை எங்களுக்கு மேய்ப்பர்கள் தேவையில்லை மீட்பர்கள் வேண்டும்..

கவிதை

ஓடும்

வாழ்வின்

ஒரிடத்தில்

பேரின்பமாய்

பெருங்கோபமாய்

பேரமைதியாய்

பெருங்காவியமாய்

பெரும்ரசனையாய்

உருவாக்கப்படும்

கவிதைகள்

வார்த்தையின்

அழகூட்டல்களால்

முற்றுப்பெறும்..


வாழ்க்கையின்

புரட்சிகள்

கலகங்களால்

மட்டுமே..


அச்சு காகித ஓலங்கள்

போதும்..

அறம் காக்கும் ஆயுத போராளிகள்

வேண்டும்..

இயற்கை

பலங் கொண்ட

காற்று

தலையில்

மண் தூற்றியபோது

வராத கோபம்

ஏன் வந்தது நான் தூற்றியபோது

என் நண்பனுக்கு


அரக்கத்தனம் கொண்ட

ஆழிப் பேரலை

வீட்டை

நொறுக்கியபோது

வராத கோபம்

என் பந்து பட்டு

ஜன்னல் உடைந்தபோது

ஏன் வந்தது

என் அண்டை வீட்டானுக்கு


அர்த்த ராத்திரியில்

வீசும்

நிலவொளி

மீது வராத கோபம்

நான் ஏற்றிய

விளக்கினால்

ஏன் வந்தது

என் துணைக்கு


இடி சத்தத்திற்கு

வராத கோபம்

என்

இடிச் சிரிப்பிற்கு

ஏன் வந்தது

என் தந்தைக்கு


மரக்கிளை

முறிந்து

மண்டை உடைந்தபோது

வராத கோபம்

ஏன் வந்தது

ஆசிரியர் பிரம்பால்

அடித்தபோது

எனக்கு


இயற்கையின்

மீது

கோபமில்லையென்றால்

நாமும்

இயற்கைதானே..


என் ஜனமும்

மரணமும்

இயற்கைதானே..


கோபம் கொள்ளாதீர்

மனித இயற்கை மீது

காதல்2

இதழ்கள் பேசும்

காதல்

இதயம் தொடுவதில்லை


இதயம் தொடும்

காதல்

இயல்பில் இணைவதில்லை


காதல் தோற்பதில்லை

காதல் நினைவுகளும்

தோற்கடிக்கப் படுவதில்லை


தோற்கடித்தேன்

என

ஜம்பம் பேசியவர்கள்

தோற்றுப்போனார்கள்


காதல்

எளிதில் துவழ்வதில்லை

எழுபதிலும்

துள்ளி எழும்


காதல்

தூவிய விதை அல்ல

தூர் பரவிய

மரம்


காதல் மரணித்தறியாதது

காதல் மனங்கள் பிறர்

கவனித்தறியாதது


முதலுமல்ல

முடிவுமல்ல

முற்றுப்பெறா

காவியம் இந்த

கவிதை

காதல்

நாம் இருவரும்

பேசும்

மொழி அல்ல...

அது நாம்

வாழும் வழி..


கண்டிராத

கதைத்திராத

முன்பின்

முகவரி தெரியாத...

பழகி அறியாத..

அவனும்

அவளும்

அன்பின் ஆவணமாய்..


அவனுக்கு அவளும்

அவளுக்கு அவனும்

உயிர் பிரியும்

உன்னதத்துவம்


இது

இலக்கியக் காதல்

அல்ல

இலக்குகள் அற்ற

இல்லற

இனிமைத்துவம்..


தித்திக்கும்

என்று

சுவைப்பதில்லை

தீர்த்தம்

என்றும்

பருகுவதில்லை

அவள் அவன் என

அவன் அவள் என

வாழும் வாழ்வை..


காதலின்

உவமையாக

ஒன்றிரண்டல்ல

ஒராயிரம்

உயிர்கள்

இத்துடன் அல்ல

இன்னமும்..

முதிர்ந்தவள்

தட்டிப் பறித்து

தனித்து விடும்

உறவை விட

தாங்கி பிடிக்கும்

ஊன்றுகோலே

 தாய்க்கு தலைப்பிள்ளை

___

கட்டியவனுக்கு தன்

உடல் கொடுத்து

உரிமை கொடுத்து


பெற்றதற்கு தன்

உயிர் கொடுத்து

உறவு கொடுத்து


உடைந்த எலும்புகளுக்கு

ஒட்டிய தோள் கொடுத்து


வலிகளின் அனுபவங்களை

வரிகளாய் ஏந்தி


விழும் வயதிலும்


உறவாடிய பிள்ளைகள்

உதறிய பின்னும்


விலகி நின்ற

 உறவுகளுக்கு

இன்னும் தன்

நெஞ்சம் கொடுத்து

வாழும்


பல் போன பொக்கை

வாய்க் கிழவி

இந்த தாய் மரம்..

பூச்சாண்டி

புகைவண்டியில்

பூச்சாண்டிகளாகிறார்கள்

அடையாளம் அறியா

சக இருக்கை பயணிகள்

உறங்கா மழலைகளுக்கு

கடவுள்

பார் போற்றும்

பகவானுக்கும்

பகைவர் உண்டாம்

இத்தரணியில்

இறைவன் இல்லையென

துதிபாட


நாளுக்கோர் அலங்காரமாம்

நாலடிக்கோர் கோவிலாம்

வினை அவனை

வியாபாரமாக்கிட


பிழை செய்து வாழ்வோர்க்கு

பிரச்சார மேடைகள்

தேவை

பிரம்மன் அவன்

 புகழ் பாட


விவேகம் கொண்ட மனிதர்க்கு

விதி கொண்டு விளையாட

வீதி வந்தான் விதி தேவன்

வீணாய்ப் போன மனிதனாய்


தரணி வந்த இறையும்

தான் யார் என்று அறியாது

இப் பாரினில்

மன மாறிப்போனான்

தரம்கெட்ட மனிதளாய்

வானரம்

நம்மின் முப்பாட்டான்..

நாம் படைத்த முந்நூறு கோடி

தெய்வங்களில் இவனும் ஒருவன்..


விலங்கினை தெய்வமாக்கி

கோவில் எழுப்பிய

மனித மாண்புகள்

சக மனிதனை கோவில் நுழைய

  தடை விதித்த

மானுட விநோதம்..


  கரை விட்டு கரை தாவும் (கட்சி அரசியல் வேஷ்டி)

யுக்தி கற்றுத் தந்த

 மரபியல் சான்று..


மார்படித்து

நீ செய்த சத்தியங்கள்

நாளைய அதிகாரத்தின்

அச்சுப் பெறா வாக்குறுதிகள்..


  வான் பார்த்து வணங்கும்

ஜந்தறிவு விலங்குக்கும்

இறைவன் பேர் சொல்லி

ஓட்டுரிமை கொடுத்து

அரசியலாக்கும்

புகைப்படமோ என

பதைபதைக்கும்

ஓர் பாமர இதயம்..


ஆன்மீக அரசியலை

பாவிக்கு மட்டுமின்றி

ஆவிக்கும்

அணிந்து விடுமோ

இந்த காவி...